திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூ டியூபர் சங்கரிடம் விடிய, விடிய விசாரணை நடத்திய போலீசார்; இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்

திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூடியூபர் சங்கரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் சங்கர்(48). இவர் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் பெண் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அளித்த புகாரின்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் சங்கரை தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி அளித்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக கோவை சிறையில் இருந்த சங்கரை திருச்சியை சேர்ந்த பெண் போலீசார் நேற்றுமுன்தினம் அழைத்து வந்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம், சங்கரை 7நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி ேகாரி மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக லால்குடி சிறையில் இருந்து பெண் போலீசார் சங்கரை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.அப்போது நீதிபதி ஜெயப்பிரதா, சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீசார் சங்கரை, திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தபோது சங்கரின் வக்கீல் அவரை 3 முறை பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் சங்கரின் ஒரு நாள் காவல் முடிவடைவதால் இன்று மதியம் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூ டியூபர் சங்கரிடம் விடிய, விடிய விசாரணை நடத்திய போலீசார்; இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: