ஆண்டிபட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்-விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் அனைத்து ஓடைகளிலும், கண்மாய்களிலும் நீர்வரத்து ஏற்பட்டது. இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் கடந்த ஆண்டு 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் ஆண்டிபட்டியை சுற்றி வைகை ஆற்றங்கரையோரத்திலுள்ள குன்னூர், அம்மச்சியாபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிப்பட்டி, புதூர், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் நெல் சாகுபடி விளைச்சல் அமோகமாக நடந்து வந்தது. இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்வது நின்று விட்ட நிலையில், ஜப்பசி மாதத்தில் நடவு செய்த நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இதனால் கடந்த சில நாட்களாக நெல் அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திலும், அல்லது தனியார் கொள்முதல் நிலையத்திலும் நெற்கதிர்களை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் அதிகரித்து வந்தது.

எனவே ஆண்டிபட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று ஆண்டிபட்டி அருகே குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் நெல் விவசாயிகளுக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு நெல் கிலோ 20 ரூபாய் 60 பைசாவிற்கும், ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தொடர்ந்து விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆண்டிபட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: