டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு மீண்டும் எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நேற்று அதிகாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். சமீபத்தில் தொரந்தோ கருவூல முறைகேடு வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாலு இதயநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லாலுவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாலு உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்தனர். பின்னர் அதிகாலை 3 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பொது வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரகத்துறை பேராசிரியரான மருத்துவர் பவுமிக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* விடுதலை செய்யுங்கள்

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், எம்எல்ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரூ.1000 கோடியை மோசடி செய்ததற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது தந்தை முதுமை மற்றும் பல்வேறு நோய்களால் துன்பப்பட்டு வரும் நிலையில், அவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். எனவே எனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: