போடி அருகே சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு

போடி : போடி அருகே, சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ரெங்கநாதபுரம், கிருஷ்ணா நகர், கரட்டுப்பட்டி, தருமத்துப்பட்டி, கீழச்சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி, முதல்வர் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 11 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேலசொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி பின்புற பகுதியில், கருப்பசாமி கோயில் சாலை மற்றும் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால், பொதுமக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை சாலையின் இருபுறமும் ஆங்காங்கே கொட்டுகின்றனர்.

 பேரூராட்சியிலிருந்து 5 நாட்களுக்கு ஒருமுறை குப்பைகளை அள்ள வருகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். தூய்மைப் பணியாளர்களும் சரியாக வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 மேலும், கழிவுநீர் வாறுகாலில் தூர்வாரி போடப்படும் குப்பைகளையும் அள்ளுவதில்லை என்கின்றனர். எனவே, இப்பகுதியில் குப்பைத் தொட்டி வைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: