போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு ரோஜர் பெடரர் ஆதரவு கரம்: 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக உறுதி

நியூடெல்லி: சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர். இவர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். ரோஜர் பெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களை பார்த்து தாமும், தனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் வருந்துகிறோம். உக்ரைனில் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம், சுமார் 6 மில்லியன் உக்ரேனிய குழந்தைகள் தற்போது பள்ளி கல்வியை இழந்துள்ளனர். இதனால் கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், யுனிசெஃப் அமைப்பின் இங்கிலாந்து தூதரான ஆண்டி முர்ரே, 2022ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் வென்ற தமது பரிசுத்தொகை முழுவதையும் உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: