மகளிர் உலக கோப்பை 4 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்

மவுட்ன் மவுங்கானுயி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், வங்கதேசத்துடன் மோதிய வெஸ்ட் இண்டீஸ் 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன் மட்டுமே எடுத்தது. ஷெமைன் கேம்ப்பெல் ஆட்டமிழக்காமல் 53 ரன் (107 பந்து, 5 பவுண்டரி), டோட்டின் 17, ஹேலி மேத்யூஸ் 18, அபி பிளெட்சர் 17 ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 49.3 ஓவரில் 136 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஷர்மின் 17, பர்கானா 23, கேப்டன் நிகர் சுல்தானா 25, சல்மா 23, நகிதா அக்தர் 25* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 4, பிளெட்சர், ஸ்டெபானி டெய்லர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகளை வசப்படுத்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. ஹேலி மேத்யூஸ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியாவுக்கு நெருக்கடி: உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸி. அணி இதுவரை விளையாடி உள்ள 4 லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா (8), வெஸ்ட் இண்டீஸ் (6) அடுத்த இடங்களில் உள்ளன. தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் முறையே 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன. இன்று தனது 5வது லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்தியா, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சமாளித்து வெற்றிக் கனியை பறிக்க வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.

Related Stories: