வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடிப்பு பஞ்ச கவ்யாவில் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தின் மூலப்பொருள்-இயற்கை முறையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஆராய்ச்சி

திருவலம் : பஞ்சகவ்யாவில் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தின் மூலப்பொருளை, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தொடர்ந்து இயற்கை முறையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பவியல் தலைவராக ஆர்.பாபுஜனார்த்தனம் பணியாற்றி வருகிறார். இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம், மலேசியா பொடோங்கெடா, அமெரிக்கா நெப்ராஸ்காலிங்கன், தாய்லாந்து பாங்காக் சூலாலாங்கார்ன், தைவான் மரபணு ஆராய்ச்சி மையம், பாப்டிஸ்ட் ஹங்காங் போன்ற பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழக உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் ஆர்.பாபுஜனார்த்தனம் முன்னிலையில், ஆராய்ச்சி மாணவர் சி.சத்தியராஜ் தலைமையில், ஆராய்ச்சி மாணவி கு.சூர்யகலா, பிஎச்டி பட்டம் பெற்ற தனேஷ்காந்தி  ஆகியோரின் உதவியுடன் கடந்த சில மாதங்களாக  ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பஞ்ச கவ்யாவின் (மாட்டு சாணம், கோமியம், பால், தயிர், நெய்) செயல்பாடு மற்றும் அதன் பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தனர்.

மேலும் அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்து 4 சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளை பாபுஜனார்த்தனம் வழிகாட்டுதலோடு வெளியிட்டனர். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இயற்கையான முறையில் கொசுக்களை அதன் எல்லா வளர்நிலையிலும் அழிப்பதற்காகவும், பஞ்சகவ்யாவில் நேனோதுகள்களை இணைத்து பெண்களின் மார்பக புற்றுநோயை குணப்படுத்தவும், கடல் இறாலின் செல்களில் ஏற்படும் பாதிப்பினை சீராக்குவதற்கும் ஆராய்ச்சி செய்து, அதற்கான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தி இயற்கையான முறையில் சுற்றுசூழலை மேம்படுத்தும் விதமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் க.முருகன், துணைவேந்தர் தாமரைசெல்வி, பதிவாளர் ஆர்.விஜயராகவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி உயிரிதொழில் நுட்பியல்துறை தலைவர் ஆர்.பாபுஜனார்த்தனம், பேராசிரியர்கள் அ.ராஜசேகர், எம்.சி.ஹரிஸ், எஸ்,விஜய்ஆனந்த், வளாக இயக்குநர் ரவிச்சந்திரன், ஆய்வக உதவியாளர் பாலுசாமி ஆகியோரின் உதவியுடன் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குரோமியம் பாதித்த மண்ணில் விவசாயம் செய்ய நடவடிக்கை

திருவள்ளுவர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில், மனித உயிரினங்களுக்கு பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சகவ்யாவை  பயன்படுத்தி என்ஜிஎஸ் முறையில் 5,036 பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட், வாலாஜா போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீருடன் கலந்து வெளியேறும் குரோமியத்தினால் அப்பகுதியில் மண்ணின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மண் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தி மண்ணை செழிப்பானதாக மாற்றி தரமான விவசாயத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: