காரை ஏற்றி 4 விவசாயிகள் படுகொலை லக்கிம்பூர் சாட்சிகளை அச்சுறுத்த அடி, உதை: உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘லக்கீம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, உத்தரப் பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் பலியாகினர். இந்த காரில் பயணம் செய்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்கறிஞர்கள் சார்பில் பொதுநல மனுவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் தரப்பில் ரிட் மனுவும்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும். மேலும், நேற்று (வியாழக் கிழமை) கூட வழக்கின் ஒரு சாட்சியம் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது, மேலும் தொடரக்கூடும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார். இதைத் தொடர்ந்து, வழக்கை வரும் செவ்வாய்கிழமைக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories: