ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 5 ஏக்கருக்கும் மேலாக மரங்கள், மூலிகை செடிகள் தீக்கிரை..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைதொடரான வண்டியூர் மலைப்பகுதியில் வேகமாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன. தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி மேற்குத்தொடர்ச்சி மலை, கேரளா மாநிலம் வரை பரந்து விரிந்திருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஆண்டிபட்டி வண்டியூர் மலைப்பகுதியில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி வருவதால் மலைப்பகுதியில் உள்ள சுமார் 5 ஏக்கருக்கும் மேலாக கொத்தகல்லி மரம், வேலமரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அடியோடு எரிந்து சேதமடைந்தன. மலையடிவார தோட்ட பகுதியில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் தீயால் மலையடிவார கிராமங்களில் கரும்புகை பரவி வருகிறது. மர்மநபர்கள் காட்டுப் பகுதியில் தீ வைத்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகி வருகின்றன. தீயை கட்டுப்படுத்த வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தீயை அணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுவட்டார மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: