இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்!: பிரதமர் மோடியிடம் பேசிய ஹங்கேரி பிரதமர் யோசனை..!!

ஹங்கேரி: இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி பிரதமர் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்காக ஹங்கேரி பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன.

இந்த போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், ஒன்றிய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்த மீட்பு பணியின் போது பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் இந்தியா மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உக்ரைன் ஹங்கேரி எல்லை வழியாக நாடு திரும்பினர்.

இந்நிலையில் ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்காக ஹங்கேரி பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அப்போது உக்ரைனில் இருந்து ஹங்கேரி வாயிலாக இந்தியா திரும்பியவர்களுக்கு ஹங்கேரி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், உக்ரைனில் இருந்து பாதியிலேயே படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories: