தடுமாறிய இங்கிலாந்து அதிரடி சதத்தால் மீட்ட பேர்ஸ்டோ

நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தடுமாறி தவித்த இங்கிலாந்து,   ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் காரணமாக கணிசமாக ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ்-  இங்கிலாந்து இடையே  இப்போது 3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. நார்த் சவுண்டில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களம் கண்டது.

தொடக்க ஆட்டக்காரர்கள்  அலெக்ஸ் லீஸ் 4, ஜாக் கிரெவ்லி 8, கேப்டன் ஜோ ரூட் 13,  டான் லாரன்ஸ் 20ரன் என அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். அதனால் 16வது ஓவரில் 4 விக்கெட் இழந்து 48ரன் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. கொஞ்சம் நேரம் தாக்குப்பிடித்த  பென் ஸ்டோக்ஸ் 36,  பென் ஃபோக்ஸ் 42ரன் விளாசி ஸ்கோர் உயர உதவினர். ஆனால் ஒருமுனையில்  பொறுப்புடன்  விளையாடிக் கொண்டிருந்த  ஜானி பேர்ஸ்டோ  அசத்தலாக சதம் விளாசினார்.

அதன் பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இங்கிலாந்து  முதல் இன்னிங்சில் 86ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 268ரன் எடுத்துள்ளது. பேர்ஸ்டோ 109*, கிறிஸ் வோக்ஸ் 24*ரன்னுடன் களத்தில் உள்ளனர். வெ.இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 16ஓவர்கள் வீசினார். அதில் அவர்  9மெய்டன் ஓவர்களை வீசியதுடன் 15ரன் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டும் எடுத்தார். கூடவே கெமர் ரோச்,  ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரும் தலா 2விக்கெட் கைப்பற்றினர். இன்னும் 4 விக்கெட் கைவசம் இருக்க இங்கிலாந்து 2வது நாளில் முதல்  இன்னிங்சை தொடர்ந்தது.

Related Stories: