சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கால் பாதத்தில் மறைத்து கடத்திய 240 கிராம் தங்க பசை பறிமுதல்: வாலிபர் கைது

மீனம்பாக்கம்:வெளி நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தினசரி பல லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த பயணிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகள், தலையில் வைக்கப்படும் விக், உள்ளாடை, துணி, ஷூ, செருப்பு ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு புதுமையான முறையில் தங்கம் கடத்தி வந்த ஆசாமியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  

 

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும்  பொருட்கள் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்றார். அவரது நடை சற்று வித்தியாசமாக இருந்தது. அதாவது, கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து இழுத்து நடந்தார். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை அழைத்து வந்து, அவரது செருப்புகளை கழற்றி சோதனையிட்டனர்.

அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரது கால்களை தூக்கி பார்த்தபோது, 2 கால்களின் பாதங்களில் பிளாஸ்திரி போட்டு பார்சல்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, தங்கப்பசை அடங்கிய சிறிய பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 240 கிராம். சர்வதேச மதிப்பு ₹12 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நூதன முறையில் தங்கத்தை காலில் ஒட்டி மறைத்து கடத்தி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: