திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை பண்பை பாராட்டுகிறோம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமிடையே குழப்பங்கள் ஏற்பட்டு நாடுதழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, திமுகவுக்கு எதிராக அவை அனைத்து தரப்பினரின் பேருரையாடலாக மாறின. ஒருசில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த அத்துமீறல்களுக்கும் திமுக தலைமைக்கும் தொடர்பு இல்லை என்பது நாடறிந்த ஒன்று.

எனினும், அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்வர் எதிர் வினையாற்றியிருப்பது மிகுந்த ஆறுதலையும்  நம்பிக்கையையும் அளிக்கிறது. திமுக தலைமை அறிவித்ததை மீறி தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகிட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உறுதி குலையாமல் காப்பாற்றியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி, நன்றி தெரிவிக்கிறோம்.

உரிமையோடும் நம்பிக்கையோடும் விசிக விடுத்த வேண்டுகோளில் உள்ள நியாயத்தை அங்கீகரித்து மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இந்த கூட்டணி தமிழ்நாட்டை காப்பாற்றும். மாநில உரிமைகளை மீட்டுத்தரும். சனாதன சக்திகளின் சதிகளை முறியடிக்கும். சமூகநீதியை உயர்த்தி பிடிக்கும் என்ற மாபெரும் நம்பிக்கை மக்களிடையே உறுதியாக இருக்கிறது. இந்த கூட்டணி பெற்றுவரும் வெற்றிகள் அதன் சாட்சியமாகும்.

தேர்தல் ஆதாயங்களுக்காக அமைக்கப்படும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகவே இருக்கும். எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி இன்று சிதறி சின்னாபின்னம் அடைந்ததற்கு அது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருந்ததே அடிப்படை காரணமாகும். அதற்கு மாறாக கொள்கை எனும் அடித்தளத்தின்மேல் தோழமை என்னும் உணர்வால் கட்டப்பட்டது இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. சமூகநீதி காக்கும் அளப்போர் களத்தில் திமுக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மு.க.ஸ்டாலினுடன் என்றென்றும் நிற்போம்.

உற்ற துணையிருப்போம்  என்று உறுதியளிக்கிறோம். வருங்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமை பொறுப்புகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

Related Stories: