இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை: விராட் கோஹ்லி பேட்டி

மொகாலி: இந்தியா-இலங்கை அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய 12 இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இதுதொடர்பாக விராட் கோஹ்லி அளித்த பேட்டி: கிரிக்கெட்டிற்கு நான் என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்துள்ளேன், அதை நான் பெருமையுடன் சொல்ல முடியும். இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன். எனவே, நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட்.

எனது முதல் டெஸ்ட் சதம் இன்னும் என் நினைவில் மிகவும் புதியது. அந்த ஒரு நாள் எனக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், மேலும் இது ஆஸ்திரேலியாவில் வந்தது என்பது மிகவும் சிறப்பானது.நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன், எனது நாட்டிற்காக நிறைய விளையாட்டுகளை வெல்வதில் நான் இன்னும் ஆர்வமாக இருக்கிறேன். எதிர்காலம் என்னவாகும் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் நடக்காதவற்றைக் கண்டு பீதி அடையாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் எதுவும் சாத்தியம் என்பதற்கு எனது வாழ்க்கை உதாரணம், என்றார்.

அனுஷ்கா சர்மாவுக்கு நன்றி

பேட்டியின் போது, தனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு கோஹ்லி நன்றி தெரிவித்தார். நான் முற்றிலும் மாறிய மனிதனாகிவிட்டேன். நான் சரியான வழியில் வளர்ந்துள்ளேன். அவளைப் போன்ற ஒரு வாழ்க்கைத் துணையைப் பெற்றதற்காக கடவுளுக்கு மிகவும் நன்றி. அவள் எனக்கு முழு பலத்தின் தூணாக இருந்தாள். அனுஷ்கா என் வாழ்க்கையில் வந்தபோது நான் உருவாக ஆரம்பித்தேன். இருவரும் ஒருவருக்கொருவர் வளர உதவியுள்ளோம். என் வாழ்க்கையில் அவள் இல்லையென்றால் என்னால் இவ்வளவு அமைதியுடனும், ஆர்வத்துடனும், வைராக்கியத்துடனும் சென்றிருக்க முடியாது என்றார்.

Related Stories: