மாஸ்கோ: உக்ரைனுடன் இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் உள்ளனரா என்ற விளக்கம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றது. இந்நிலையில் இன்று உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது.
குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. ஏற்கெனவே நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் கோமல் நகரில் நேற்று முன்தினம் 5 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடு முடிவும் எட்டப்படவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்யாவின் தாக்குதல் மிக தீவிரமடைந்தது. ஒன்று, இரண்டு நகரங்களை மட்டும் தாக்குதலுக்காக உட்படுத்திய ரஷ்யா, தற்போது 7 நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
போரானது சற்றும் ஓயாத நிலையிலேயே உள்ளது. மூன்றாம் உலகப்போர் மிகுந்த அழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை; ஏராளமான நாடுகள் நண்பர்களாக இருக்கிறது. மேலும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை உக்ரைன் தள்ளிப் போடுவதற்கு காரணம் அமெரிக்கா தான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 7-வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் உக்ரைனுக்கு அணு ஆயுதங்கள் வழங்க சில நாடுகள் முன்வந்துள்ளன. இந்நிலையில், இன்றிரவு உக்ரைன் அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. கீவ்வில் உள்ள மக்களும் ரஷ்ய ராணுவங்களை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்ய ராணுவப்படை உள்ளே வருவதை தடுக்க தடுப்பு வேலிகளும் ஆங்காகே அமைத்து வருகின்றனர்.