சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்கள் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த குழுவினரால் தயாரிக்கப்படும் தரமான உணவுகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், உணவு திருவிழா, சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உணவு திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த அரியலூர் தோசை வகைகள், சென்னை தெரு உணவு, செங்கல்பட்டு காய்கறி தோசை, கருவாடு சூப், கோயம்புத்தூர் கொங்கு மட்டன் பிரியாணி, கடலூர் மீன் புட்டு, திண்டுக்கல் சிக்கன் பிரியாணி, தர்மபுரி ராகி அதிரசம், ஈரோடு கோதுமை கீரை போண்டா, கள்ளக்குறிச்சி வரகு அரிசி பிரியாணி, காஞ்சிபுரம் கோயில் இட்லி, கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, கிருஷ்ணகிரி பருப்பு அடை – காரச் சட்னி, மதுரை சிக்கன் பிரியாணி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், நீலகிரி ராகி களி – அவரை குழம்பு (கோத்தர் உணவு), புதுக்கோட்டை கோதுமை பணியாரம், ராமநாதபுரம் மீன் உணவுகள், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சேலம் முட்டை தட்டுவடை, சிவகங்கை நெய் சாதம், தென்காசி உளுத்தங்களி, தஞ்சாவூர் மட்டன் உணவுகள்,
திருவள்ளூர் நெய்தல் உணவுகள், திருவண்ணாமலை சிமிலி, தூத்துக்குடி இலங்கை யாழ் உணவுகள், திருநெல்வேலி நரிப்பயிறு பால், திருப்பத்தூர், ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், திருச்சி வரகு மட்டன் பிரியாணி, திருவாரூர் பனை உணவுகள், தேனி பால் கொழுக்கட்டை, வேலூர் தேங்காய் போளி, விழுப்புரம் சிறுதானிய சிறப்பு உணவுகள், விருதுநகர் புரோட்டா கடை உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உணவு திருவிழா மாலை 4 மணி முதல் இரவு 9 மணி நடைபெறும். 24ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனுமதி இலவசம். இந்த விழாவில், உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
