குடியரசு தின வன்முறை உட்பட விவசாயிகள் மீதான 17 வழக்குகள் வாபஸ்: டெல்லி அரசு ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதல் டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் ஒன்றிய அரசு உறுதியளித்தது. விவசாயிகளுக்கு எதிராக மொத்தம் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 17 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 17 வழக்கில் குடியரசு தினத்தன்று 25 டிராக்டர்களில் 300 விவசாயிகள் செங்கோட்டையில் பேரணி நடத்தினர்.

அப்போது, வன்முறை வெடித்தது. இது தொடர்பான வழக்குகளும் இந்த 17ல் அடங்கும். இதேபோல், லோனி எல்லையில் 150 டிராக்டர்களில் வலம் வந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகளும் திரும்ப பெறப்படுகிறது. இந்த வழக்குகள் தொடர்பான கோப்புக்கள் ஆளுநர் பைஜல் அலுவலகத்தில் இருந்து டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த 31ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. சட்டத்துறையின் கருத்துக்கள் கேட்கப்பட்ட பின் இந்த வழக்குகளை திரும்ப பெறுவதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: