ரஷ்யாவின் போர் தாக்குதல் மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?: உக்ரைன் டென்னிஸ் வீராங்கனைகள் கேள்வி

கீவ்: தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் (டபிள்யூடிஏ) மற்றும் சர்வதேச டென்னிஸ் கழகம் (ஐடிஎஃப்) ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று உக்ரைனை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைனை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் மார்ட்டா கோஸ்ட்யுக் மற்றும் லெசியா சுரென்கோ. மார்ட்டா கோஸ்ட்யுக் தற்போது மகளிர் ஒற்றையர் சர்வதேச தரவரிசையில் 54வது இடத்தில் உள்ளார். லெசியா சுரென்கோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றையர் தரவரிசையில் 24வது இடத்தில் இருந்தார். உக்ரைனில் ரஷ்ய படைகள் ஊடுருவி முக்கிய நகரங்களை பிடித்து வருகின்றன. ரஷ்யாவின் இந்த அத்துமீறலை, மகளிர் டென்னிஸ் அசோசியேஷனும், சர்வதேச டென்னிஸ் கழகமும் ஏன் கண்டிக்கவில்லை என்று இந்த இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து சர்வதேச டென்னிஸ் கழகமும், மகளிர் டென்னிஸ் அசோசியேஷனும் இதுவரை குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. வீராங்கனைகள் மீதான பாலியல் அத்துமீறல், சமூக நீதி பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தெல்லாம் உடனடியாக கண்டனம் தெரிவித்து வரும் மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் இதுவரை ரஷ்யாவின் தாக்குதல் குறித்து, ஏன் வாய் திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? முதலில் ரஷ்யாவில் நடைபெற உள்ள அனைத்து டென்னிஸ் போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும். ரஷ்ய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதாவது ரஷ்யாவின் அங்கீகரிக்கப்பட்ட வீராங்கனைகளாக அவர்கள் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அனுமதிக்கலாம்.

இந்த விஷயத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை பார்த்து மகளிர் டென்னிஸ் அசோசியேஷனும், சர்வதேச டென்னிஸ் கழகமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உலக நாடுகளுக்கு எங்களது வேண்டுகோள். போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ரஷ்யாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துங்கள். எங்கள் வீடுகளில் அமைதி நிலவ வேண்டும். மனித நேயத்துடன் இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: