சேலம், தர்மபுரி பயணிகள் பயன்பெறும் வகையில் ஈரோடு- ஜோலார்பேட்டை இடையே பாசஞ்சர் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?: வியாபாரிகள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

சேலம்: சேலம், தர்மபுரி பயணிகள் பயன்பெறும் வகையில் ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் மீண்டும் பழையபடி இயக்கத்திற்கு கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேலம்-கோவை பாசஞ்சர், சேலம்-கரூர் பாசஞ்சர், சேலம்-விருத்தாச்சலம் பாசஞ்சர், ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர், மேட்டூர் அணை-ஈரோடு பாசஞ்சர் ஆகிய ரயில்கள், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அனைத்து ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ், மெயில், அதிவிரைவு ரயில்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், முக்கிய வழித்தடங்களில் வழக்கமான பாஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி கூடுதல் கட்டணத்தில் இயக்கி வருகின்றனர். இந்தவகையில், சேலம் கோட்டத்தில் சேலம்-கரூர், சேலம்-விருத்தாச்சலம் ஆகிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்திற்கு வந்துள்ளன. ஆனால், சேலம், தர்மபுரி மக்கள் அதிகளவு பயன்படுத்தி வந்த ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் இன்னும் இயக்கத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு பகுதி வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த ரயில் இயக்கத்திற்கு வந்தால், ஈரோட்டில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 7.40க்கும் வந்து, பின்னர் பொம்மிடி, புட்டிரெட்டிபட்டி, மொரப்பூர், திருப்பத்தூர் வழியே ஜோலார்பேட்டைக்கு காலை 10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்திலும், காலை நேரத்தில் இந்த ரயில் இருக்கிறது. இதனால், இருமார்க்கத்தில் இருந்தும் வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் சேலம் மற்றும் ஈரோட்டிற்கு செல்ல அதிகளவு இந்த ரயிலை பயன்படுத்துவார்கள்.

ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் இயக்கத்திற்கு வராத காரணத்தால், திருப்பத்தூர், தர்மபுரி பகுதியில் இருந்து சேலத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க வரும் மாணவர்கள் தினமும் ₹100க்கு மேல் பயணச் செலவு செய்கின்றனர். இதனால், அவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோல், ஈரோட்டிற்கு இந்த ரயிலில் சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்யும் ஆண்களும், பெண்களும் சென்று வருவார்கள். அவர்களும் தற்போது பெரும் அவதியடைந்து வருகின்றனர். சேலம்-விருத்தாச்சலம் பாசஞ்சர் ரயிலை எப்படி எக்ஸ்பிரசாக மாற்றி இயக்கினார்களோ, அதேபோல் ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயிலையும் எக்ஸ்பிரஸ் கட்டத்திற்கு மாற்றியாவது  இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளும், எம்பி, எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அதனை தெற்கு ரயில்வே நிர்வாக தரப்பிற்கு கொண்டு சென்றுள்ளோம். அதனால், விரைவில் அந்த ரயில் இயக்கத்திற்கு வர வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

Related Stories: