ரயில்வே கேட் மூடாமல் செல்லும் தண்டவாள பராமரிப்பு ரயிலால் விபத்து அபாயம்: செக்கானூரணியில் பொதுமக்கள் அச்சம்

திருமங்கலம்: மதுரையிலிருந்து போடி வரை அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் தேனி வரை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தேனி-போடி இடையே பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் செக்கானூரணியில் புதிதாக ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேட் கீப்பர் நியமிக்கப்படவில்லை. உசிலம்பட்டி, தேனி பகுதிக்கு பராமரிப்பு பணிக்கு செல்லும் ரயில், தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வேகன் ஆகியவை அடிக்கடி மதுரை சென்று திரும்புகிறது. வாரத்தில் 5 நாள்கள் பராமரிப்பு ரயில் செல்லும் நிலையில், செக்கானூரணியில் ரயில்வே கேட் மூடப்படுவதில்லை.

பராமரிப்பு ரயிலில் வரும் ஊழியர்கள் சிலர், கேட் பகுதியில் இறங்கி சாலையில் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி வைத்து பராமரிப்பு ரயிலை அனுப்புகின்றனர். ரயில் கடந்து செல்லும்போதே இவர்களும் ஒடிபோய் அதில் ஏறி செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘செக்கானூரணி ரயில்வே கேட்டில், கேட் கீப்பர் நியமிக்கப்படவில்லை. தண்டவாளத்தை சரிசெய்யும் பராமரிப்பு ரயில், தண்டவாளங்களுக்கு இடையே போடப்படும் கட்டைகளை எடுத்தும் செல்லும் சரக்கு ரயில் அவ்வப்போது வந்து செல்கின்றன. இந்த சமயங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதில்லை. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: