பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இன்று துவக்கம்: ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று காலை பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா துவங்குகிறது. நாளை மறுதினம் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா மார்ச் மாதம் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா, இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளதால் வண்ண விளக்குகளாலும் கொடி, தோரணம், வாழைமரம் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் பிறந்தநாள் விழா இன்று காலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

பின்னர், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை, கலச விளக்கு வேள்வி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை  பங்காரு அடிகளாரை வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக சித்தர் பீடம் அழைத்து வரும் நிகழ்ச்சி, பக்தர்களின் பாதபூஜை, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுதினம் காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை பங்காரு அடிகளாரை தங்கரதத்தில் சித்தர் பீடம் அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா மலர் வெளியீடு உள்ளிட்ட மேடை நிகழ்ச்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதில், தெலுங்கானா ஆளுநரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான 3ம் தேதி, பக்தர்கள் பங்காரு அடிகளாரை அவரது இல்லத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக சித்தர் பீடம் அழைத்து வருகிறார்கள். அங்கு  அவரது பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் செய்து வருகிறது.

Related Stories: