சிவராத்திரி விழாவையொட்டி நாளை தொடக்கம் குமரியில் 12 சிவாலயங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்

நாகர்கோவில்: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளை மறுதினம் (1ம்தேதி) மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி அன்று, குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும். கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 110 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை ஓடி சென்று வழிபடுவார்கள். தற்போது வாகனங்களிலும் செல்வது வழக்கமாக உள்ளது. மாலை அணிந்து விரதம் இருந்து, காவி உடை அணிந்து, கையில் விசிறி, இடுப்பில் திருநீறு பையுடன் பக்தர்கள் ஓட்டமும் நடையுமாக  செல்வர். திருமலையில் இருந்து ஓட்டத்தை நாளை (28ம்தேதி)  மாலை தொடங்குவர்.

திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனைக்கு நள்ளிரவில் வந்து சேர்வர். பின்னர் சிவராத்திரி தினமான 1ம் தேதி அதிகாலையில் பன்றிபாகத்திலிருந்து பயணம் தொடங்கும் பக்தர்கள் கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு சிவராத்திரி அன்று இரவில் திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களிலும் அறநிலையத்துறை சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள், ஒலி, ஒளி, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: