ரபாடா வேகத்தில் நியூசிலாந்து திணறல்

கிறைஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி 364 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. எல்கர் 41, எர்வீ 108, மார்க்ரம் 42, வாண்டெர் டஸன் 35, பவுமா 29, மகராஜ் 36 ரன் எடுத்தனர். மார்கோ ஜான்சென் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் வேக்னர் 4, ஹென்றி 3, ஜேமிசன் 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்துள்ளது. கேப்டன் லாதம் 0, வில் யங் 3, பிளண்டெல் 6 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கான்வே 16, நிகோல்ஸ் 39 ரன் எடுத்து ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 26.3 ஓவரில் 91 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நியூசி. அணியை டேரில் மிட்செல் - கிராண்ட்ஹோம் இணைந்து கரை சேர்க்க போராடி வருகின்றனர். டேரில் 29 ரன், கிராண்ட்ஹோம் 54 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: