ஓசூர் மாநகராட்சியில் பாமக வெற்றி வேட்பாளர் திமுகவில் இணைந்தார்: 4 சுயேச்சைகளும் ஆதரவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற ஒரே பாமக வேட்பாளரும் திமுகவில் இணைந்தார். மேலும் 4 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் திமுகவின் பலம் 28 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கடந்த 1962ல் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதீத தொழில் வளர்ச்சி காரணமாக, 1992ல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர், பின்னர் 1998ல் தேர்வு நிலை நகராட்சியாக உயர்ந்தது. ஓசூரில் 2 சிப்காட் கொண்டு வந்ததால் 150க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் அமைந்தன.

இதனால் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓசூருடன் ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, மத்திகிரி பேரூராட்சி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. ஓசூர் மாநகராட்சிக்கு முதன் முறையாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக சார்பில் 42 பேரும், காங்கிரஸ் சார்பில் 3 பேரும் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் 44 பேர் போட்டியிட்டனர்.

இதில், திமுகவை சேர்ந்த 21 பேரும், காங்கிரசை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். அதிமுகவை சேர்ந்த 16 பேர் வெற்றி பெற்றனர். 5 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். இதுதவிர பாஜ 1, பாமக 1 வெற்றி பெற்றுள்ளனர். இதில் பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவுக்கு 22 உறுப்பினர்களும், காங்கிரசில் ஒருவரும் என 23 பேர் உள்ளதால், ஓசூர் மாநகராட்சி திமுக வசமானது. இதனிடையே, சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், 27 கவுன்சிலர்களும் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற செல்கின்றனர்.

Related Stories: