இன்று அரையிறுதி ஆட்டங்கள் புரோ கபடி பைனலுக்கு யார்? பாட்னா பைரேட்ஸ்-யுபி யோதா மோதல்; தபாங் டெல்லி-பெங்களூர் புல்ஸ் சந்திப்பு

பெங்களூர்: புரோ கபடி அரையிறுதி ஆட்டங்களில் இன்று பாட்னா பைரேட்ஸ்-யுபி யோதா, தபாங் டெல்லி-பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன. புரோ கபடி தொடரின் 8வது சீசன் பெங்களூரில் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கின்றன. டிச.22 ம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள் பிப்.19ம் தேதி முடிந்தன. இந்த தொடரில் விளையாடிய 12 அணிகளில், முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. அதில் முதல் 2 இடங்களை பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 4 அணிகள் ‘வெளியேற்றும் சுற்றில்’ களம் கண்டன. அந்த சுற்றில்  பெங்களூர் புல்ஸ் 49-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சையும், யுபி யோதா 42-31 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்டனையும் வீழ்த்தி அரையிறுதிகுள் நுழைந்தன. இன்று இரவு நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ்-யுபி யோதா அணிகள், 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி-பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

* பாட்னா-யுபி

புரோ கபடி தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 10 ஆட்டங்களில மோதியுள்ளன. அவற்றில் பாட்னா 5-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை பிளே ஆப் சுற்றில் மோதின. அந்த 2 ஆட்டங்களிலும் யுபி தான் வென்றது. நடப்புத் தொடரில் லீக் சுற்றின் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டம் வென்றன. முதல் ஆட்டத்தில் யுபி ஒரு புள்ளி வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் பாட்னா 2புள்ளி வித்தியாசத்திலும் வென்றுள்ளன.

* டெல்லி-பெங்களூர்

இதுவரை நடந்த புரோ கபடி தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 16முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் டெல்லி 8-6  என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. பிளே ஆப் சுற்றுகளில் ஏற்கனவே 3 முறை மோதியதில் டெல்லி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 7வது தொடரிலும் இந்த அணிகள் அரையிறுதியில் மோதின. அதிலும் டெல்லிதான் வென்றது. நடப்புத் தொடரின் லீக்சுற்றில் முதல் ஆட்டத்தில் பெங்களூர் 39 புள்ளி வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Related Stories: