மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

வில்லியனூர் : வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி கங்கைவராக நதீஸ்வரர் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள சங்காராபரணி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் உள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த திருத்தலம் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையின் மற்றொரு பகுதியில் காசி விஸ்நாதர் திருத்தலமும் உள்ளது. திருக்காஞ்சி கங்கை வராகநதீஸ்வரர் கோயில் காசியை விட கால்பங்கு வீசம் அதிகமானது என்றும் கூறியதாக வரலாறு உண்டு. அதனால் ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் மாசிமக தீர்த்தவாரியின்போது ஏராளமானோர், தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய கங்கை வராகநதீஸ்வரர் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் புண்ணிய தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான மாசி பிரமோற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான 9ம் நாள் தேர் திருவிழா நேற்று முன்தினம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, நேற்று மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து கோயில் முன் போடப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பொதுமக்கள் பலரும் வந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு, சாமியை தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ராமு, டோம்னிக் பிரான்சிஸ் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜன், கீர்த்தி, தயாளன், பெரியசாமி உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் தலைமை குருக்கள் சரவணா சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: