முல்லைப் பெரியாறு அணை விவகாரம் 2014 தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கேரள அரசு  நேற்று புதிய பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. இந்த அபாயத்தை போக்க நிரந்த தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய அணை கட்டுவதே  நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதனால், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக தான் உள்ளது என கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் கடந்த 2018, 2021ம் ஆண்டில் கேரளாவில் அதிக மழை பெய்தது. இதனால் பெரும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மிகவும் பாதித்தது. இதுபோன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை இல்லை. ஏற்கனவே, இதே போன்று கனமழையால் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை உடைந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதே கேரளாவின் நிலைபாடு. தற்போது அணையின் பாதுகாப்புக்கான கண்காணிப்பு குழுவை மாற்றி விட்டு, அணையில் நிரந்தர கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: