அதிமுக ஆட்சி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் ஆசிரியர் பயிற்சி தேர்வில் அதிக மதிப்பெண் அளித்த 130 விரிவுரையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வில்(டிடிஇ) அதிக மதிப்பெண் அளித்ததாக 130 விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப் பலன்களை நிறுத்தி வைத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்படும் 1 முதல் 5ம் வகுப்புகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி என்னும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு(டிடிஇ) எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த படிப்பு இரண்டு ஆண்டுகள் நடத்தப்படுகிறது. பின்னர் இந்த படிப்பு  முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆசிரியர் பயிற்சியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கவுன்சலிங் மூலம் சேர்க்கப்படுகின்றனர். அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள 18  ஆயிரம் இடங்களில் கடந்த ஆண்டு வெறும் 4 ஆயிரம் பேர்  தான் சேர்ந்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம்  நடந்த மேற்கண்ட ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வில்  முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி முதலாம் ஆண்டு தேர்வுக்கு 5019 பேரும், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத 6539 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இது  தவிர அரியர் தேர்வில் முதலாம் ஆண்டில்  தனித் தேர்வர்கள் 5420 பேர்,  இரண்டாம் ஆண்டில் தனித் தேர்வர்கள் 11950 பேர்   எழுதினர்.  அவர்களுக்கான தேர்வு முடிவுகள் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவுகளின்படி, இரண்டாம் ஆண்டில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியோரில் 455 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். செப்டம்பர் மாதம் விடைத்தாள் திருத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பட்டியலை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்தது.

அப்போது,  மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் நிர்ணயிக்கப்பட்ட 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், விடைத்தாள் திருத்திய 185 விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 5 முதல் 50 மதிப்பெண்கள் வரை கூடுதலாக மதிப்பெண் போட்டதாக விசாரணையில் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறை பரிந்துரை செய்தது. அதற்கான விசாரணையை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்க இருந்த நிலையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது  என்று 30 விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தவிர 10 மதிப்பெண் வரை முறைகேடாக போட்ட 130 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்களை நிறுத்தி வைத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: