குடும்பத்தின் கடனை அடைக்க வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்-ஐந்தே மணி நேரத்தில் கைது செய்து போலீஸ் அசத்தல்

மதுரை :  மதுரையில் கடனை அடைப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.  மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி(23). இவர் சக்திவேலம்மாள் நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மன்றம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை  பின்தொடர்ந்து டூவீலரில் வந்த நபர்,  பிரியதர்ஷினி கழுத்தில் இருந்த  தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் குறித்து மதுரை  எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உத்தரவில், எஸ்எஸ் காலனி குற்றப்பிரிவு எஸ்ஐ மணிக்குமார்  தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வழிப்பறி வாலிபர் தப்பிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைக்கொண்டு அதிரடியாக போலீசார் செயல்பட்டு,  வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், மதுரை பைக்காராவை சேர்ந்த கதிரவன்(30) என தெரிந்தது. குடும்பத்தின் கடனை திருப்பி செலுத்தவே வேறு வழி தெரியாமல் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக் கொண்டார். இதற்கு முந்தைய நாள், பைக்காரா பகுதியில் மற்றொரு பெண்ணிடம் டூவீலரில் சென்று செயின் பறிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கதிரவனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் கடன் சுமை காரணமாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை, ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தது  பொதுமக்கள் பாராட்டைப் பெற்றது.

Related Stories: