பிரபல தொழிலதிபரின் டிப்பர் லாரி கடத்தல்: சைதாப்பேட்டையில் 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி: சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (54). பிரபல தொழிலதிபரான இவர், 5க்கும் மேற்பட்ட டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஒரு டிப்பர் லாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனது. இதுகுறித்து ஓட்டேரி போலீசில் குருமூர்த்தி புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டிப்பர் லாரியை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பெயரில் வேளச்சேரி, காமராஜபுரம், மருதுபாண்டி ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (63), மேடவாக்கம் புதுநகர், காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், டிப்பர் லாரியை நாமக்கல்லுக்கு கடத்தி சென்று விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையாளர் சிங்காரவேலு, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் தனிப்படை போலீசார் இருவருடன் நேற்று முன்தினம் நாமக்கல்லுக்கு விரைந்து சென்றனர். அங்கு அனாதையாக நின்றிருந்த லாரியை மீட்டு உரிமையாளர் குருமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். டிப்பர் லாரி கடத்தப்பட்ட சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: