சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்..!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, கடந்த ஆண்டு நவம்பர் 22ல் பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அன்றைய தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்து வருகிறார். குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தீர்த்து வைத்துள்ளார்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்றுவதில் எந்த சமரசமும் செய்யாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முனீஸ்வர் நாத் பண்டாரியை  உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை 10 மணியளவில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

Related Stories: