10 இடங்களில் முனையம் இந்தியா - வங்கதேசம் இடையே படகு சேவை: கோமதி நதியை ஆழப்படுத்த நிதி

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு நீர்வழி போக்குவரத்து துவங்குவதற்கான பணியை ஒன்றிய அரசு விரைவுப்படுத்தி இருக்கிறது. சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்துக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நதிகளில் ஏற்கனவே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரிபுராவில் உள்ள செபாஹிஜாலா மாவட்டம், சோனாமுரா என்ற இடத்தில் இருந்து வங்கதேசத்தின் தவுட் கண்டி வரை 93 கிமீ நீளமுள்ள கோமதி ஆற்றில் படகு போக்குவரத்து துவங்கப்படுகிறது.  இந்த திட்டத்திற்காக ஆற்றை ஆழப்படுத்தவும், 10 இடங்களில் படகு தளங்கள் அமைக்கவும் ரூ.24.53 கோடியை ஒன்றிய கப்பல்  போக்குவரத்து துறை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து திரிபுரா மாநில போக்குவரத்து துறை செயலாளர் டர்லாங் கூறுகையில், ‘‘இந்த ஆற்று வழித்தடத்தில் இந்திய பகுதியில் 1.5  கிமீ துாரமும், வங்கதேசத்தில் 14 கிமீ துாரமும் ஆழப்படுத்த வேண்டியுள்ளது. சோனாமுரா மாவட்டம், ஸ்ரீமந்த்பூர் என்ற இடத்தில் ரூ.5 கோடி செலவில் நிரந்தர படகு தளம் அமைக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் மே மாதத்துக்குள் தவுட் கண்டியில் இருந்து சோனமுராவுக்கு 300 டன் சரக்குகள்  படகுகளில் ஏற்றி வரப்படும்,’’ என்றார். இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய கப்பல்  போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் நாளை திரிபுரா வருகிறார்.

Related Stories: