குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் நாளை திறப்பு!: பொதுமக்கள் பார்வையிட அனுமதி..ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க முகல் கார்டனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காற்றை தூய்மைப்படுத்தக்கூடிய தாவரங்களும் இந்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த மலர் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மார்ச் 16ம் தேதி வரை இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம். தோட்டப் பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமைகள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையின் இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டும், நேரடி நுழைவு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது.

Related Stories: