இட்லி, சாம்பார், சட்னி பிடிக்கும் என்கிறார் தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஏதும் செய்யவில்லை: திண்டுக்கல் லியோனி பேச்சு

சென்னை: திருத்தணி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் பிரசாரத்தை தொடங்கினேன். அங்கே 100% சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் நகராட்சி பேரூராட்சியில் 100% வெற்றி நமக்கு கிடைக்கும். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் ஆகியோர் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இருந்து எதிரிகளை காணாமல் செய்து விடுவார்கள்.

பாரத பிரதமர் மோடி தமிழக மக்களை நேசிப்பதாக கூறுகிறார், அப்படி அவர் நேசிப்பதாக இருந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை, தமிழ்நாட்டிற்குள் வந்து தமிழ்நாட்டு உடை அணிந்து கொண்டு இட்லி, சாம்பார், சட்னி பிடிக்கும் என்கிறார். ஆனால், தமிழகத்திற்கு ஏதும் அவர் செய்யவில்லை.  தமிழக வளர்ச்சிக்காக அதிமுகவினரும் எதுவும் செய்யவில்லை, பாஜவின் அடிமைகளாகத்தான் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி இல்லம் தேடி கல்வி துவங்கி வைத்தார். மருத்துவமனைக்கு வரமுடியாத முதியவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முதல்வர். இதுமட்டுமல்ல, ஆந்திர மாநிலம் நகரி எம்எல்ஏ ரோஜா, தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து 10,000 தமிழ் பாடல்நூல் புத்தகங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை வைத்து சில மணித்துளி நேரத்தில் அந்த புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தரவின் நகலை அவர் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைத்தார். அவர் வெளியே வந்து தமிழக முதல்வர் மின்னல் வேகத்தில் செயலாற்றி வருகின்ற முதல்வர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வாக்களிக்கும்படி மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: