நாட்டின் அமைதியை சீர்குலைத்தால் பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து!: ஒன்றிய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை..!!

டெல்லி: நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை ஒன்றிய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, வெளிநாடுகள் உடனான நல்லுறவு, அமைதி, நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றை பாதிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அவதூறு பரப்புதல், வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 உறுப்பினர்களை கொண்ட ஒன்றிய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அக்குழுவின் உறுப்பினர்களை ஒன்றிய அரசு நியமிக்கும் என்றும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக அக்குழுவே முடிவு எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வரும், செய்தி இணைய தளங்களுக்கும் அங்கீகார அட்டைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணையவழி செய்தி வலைத்தளங்களுக்கும் புதிய விதிகள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பத்திரிகை, டிவி செய்தியாளர்களுக்கு ஒன்றிய அரசு அங்கீகார அட்டை வழங்குகிறது. ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த அட்டை இருப்பவர்கள் மட்டுமே, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: