திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரதசப்தமி; தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நாளான இன்று காலை முதல் இரவு வரை 7 வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9 நாட்கள் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில்  மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார். இதனை ‘மினி பிரம்மோற்சவம்’ என அழைப்பார்கள்.   

அதன்படி இந்த ஆண்டு ரதசப்தமி நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள சம்பங்கி (கல்யாண உற்சவ) மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.  

தொடர்ந்து 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், 6 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணியளவில் சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்பசுவாமி அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி உற்சவத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்திருந்து காலை முதல் இரவு வரை காத்திருந்து 7 வாகன சேவையும் பார்த்து சுவாமியின் அருள் பெறுவர். ஆனால் கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டு கோயில் கல்யாண மண்டபத்தில் சுவாமி அருள் பாலித்தார். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: