வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு: கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: வெறுப்பு பேச்சு விவகாரம் தொடர்பாக மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை கர்நாடகா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கர்நாடக மாநிலம் ஹெப்பாலைச் சேர்ந்த ஜியாவுர் ரஹ்மான் நோமானி என்பவர், பெங்களூருவில் இருக்கும் 42வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்’ என்று பேசியுள்ளார்.

மோடியின் பேச்சு முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த படையெடுப்பாளர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் மக்களிடையே வெறுப்பைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 503, 504, 505 (2) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு அமிர்தல்லி காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதன் மீதான விசாரணையை நாளைக்கு (மே 28) ஒத்திவைத்துள்ளது. முன்னதாக மனுதாரர் ஜியாவுர் ரஹ்மான் நோமானி தரப்பில், பிரதமர் மேடிக்கு எதிராக வழக்குபதிய கோரி அமிர்தல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும், தேர்தல் தொடர்பான புகார் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பைக் காரணம் காட்டி, எப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறை மறுத்து விட்டது. மேலும் கடந்த ஏப்ரல் 27ம் தேதி பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்பதால், தற்போது அவர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

The post வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு: கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: