ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது

புவனேஸ்வர்: ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவின் போது, பெகுனியா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்: 114ல் குர்தா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரசாந்தா ஜெகதேவ் (55) வரிசையில் காத்திருந்தார்.

அப்போது வாக்குப்பதிவு மந்தமாக நடப்பதாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழே தள்ளிவிட்டார். அதனால் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. சில மணி நேர தாமதத்திற்கு பின், வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு வாக்குச்சாவடியை விட்டு வெளியேறிய ஜெகதேவ், அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதேவை மடக்கி பிடித்தனர். அவரை போலகார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது ஐபிசி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனால் அவரை கைது செய்ததாகவும், நீதிமன்ற காவலில் தற்போது ஜெகதேவ் இருப்பதாகவும் குர்தா எஸ்பி அவினாஷ் குமார் கூறினார்.

The post ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது appeared first on Dinakaran.

Related Stories: