அமமுகவிலிருந்து வந்தவருக்கு சீட் வழங்குவதா? அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா: ஓபிஎஸ் சொந்த ஊரில் பரபரப்பு

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில் அமமுகவிலிருந்து வந்தவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கியதால், அந்த வார்டு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில், சகுந்தலா என்பவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், தேமுதிகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். 10 மாதங்களுக்கு முன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு இன்னும் உறுப்பினர் அட்டை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு 6வது வார்டில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதை கண்டித்து 6வது வார்டு அதிமுக செயலாளர், இணைச்செயலாளர், பிரதிநிதிகள் மேலவை பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் 9 பேர், கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்து, பெரியகுளம் நகரச் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘அதிமுக நகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் நீண்ட காலமாக கட்சியில் உள்ள தொண்டருக்கு வாய்ப்பு வழங்க பலமுறை கேட்டோம். இதை கேட்காமல் சமீபத்தில் கட்சிக்கு வந்தவரை 6வது வார்டுக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.

எனவே, கட்சி பொறுப்பு தேவையில்லை என முடிவெடுத்து ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளோம். இதில், லட்சுமி என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்’’ என்றனர். ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே, அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்த விவகாரம், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: