சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கு அதிமுக நிர்வாகி சிக்கினார்: கூலிப்படையினர் 5 பேர் கைது

திருச்சி: சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி உட்பட 2 பேரை சமயபுரம் சுங்கச்சாவடியில் சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் கொலையில் நேரடியாக ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை விழுப்புரம் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (35), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், 188வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் அவரது மனைவி போட்டியிட மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு 9 மணிக்கு தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போன் வந்ததால் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அந்த நேரத்தில் திடீரென 3 பைக்குகளில் வந்த 6 பேர், செல்வத்துக்கு சால்வை அணிவிப்பது போல் நடித்து பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து, கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் சென்னை செம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும், அவருக்கும் செல்வத்துக்கும் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமெனவும் போலீசில் செல்வம் புகார் செய்திருந்தார். மேலும் செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர், தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் இவருக்கும், செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

எனவே செல்வத்தின் நண்பர், தூத்துக்குடி அதிமுக பிரமுகருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அதோடு செல்வத்துக்கும் ரவுடி சி.டி.மணிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சி.டி.மணியின் எதிரி செந்தில், செல்வத்தின் மீது கோபத்தில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் என்பதை கண்டுபிடித்து, அவர்களை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திருச்சி வழியாக காரில் செல்வம் கொலை வழக்கு குற்றவாளிகள் தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் சமயபுரம் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் சென்னையிலிருந்து வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த காரில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், கார் டிரைவர் தனசீலனிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சென்னை தனிப்படை போலீசாருக்கு தகவல் அளித்த போலீசார் 2 பேரையும் காருடன் சமயபுரம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நேற்று காலை சமயபுரம் வந்த சென்னை தனிப்படை போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வியாசர்பாடியைச் சேர்ந்த கூலிப்படை கும்பல்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனால் அவர்களை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும், கூலிப்படையினர் தலைமறைவாகிவிட்டனர். அதேநேரத்தில், வடசென்னை கூலிப்படையினர் விழுப்புரம் அருகே வக்கீல்களுடன் செல்வதாக மற்றொரு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிசார் விழுப்புரம் மாவட்ட போலீசாருடன் இணைந்து விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே கூலிப்படையினரை மடக்கி கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை எருக்கஞ்ச்சேரியை சேர்ந்த விக்னேஷ்(21), புவனேஸ்வர் (21), வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய்(21), அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்த விக்னேஷ்(21), திருவள்ளூர் விஜயநல்லூர் கிஷோர்  குமார்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கூலிப்படையினர் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் குறித்த முழு தகவல்களும், என்ன பிரச்னைக்காக கொலை நடந்தது என்பதும் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: