தமிழகத்தில் மின்னல் வேகத்தில் சீமைக் கருவேல ஒழிப்பு பணி: மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் சீமைக் கருவேல ஒழிப்பு பணி மின்னல் வேகத்தில் நடைபெற போகிறது என்று மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும் நிலத்தடி நீரும் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சீமை கருவேல நச்சுச்செடியால் விளைய கூடிய ஆபத்துகளை உணர்ந்து தமிழகம் முழுவதும் அவற்றை அகற்ற வேண்டுமென்று ஆணையிட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வைகோ தாக்கல் செய்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து, வழக்கில் கூறப்படுகிற கருத்துகளை ஏற்று, தமிழகத்தின் மண்வளத்தை - சுற்றுச்சூழலை பாதுகாக்க சீமை கருவேல் நச்சுச் செடியை அடியோடு அகற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரண்டு வாரங்களில் இவ்வழக்கு தொடர்பான அரசின் நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி ஆணையிட்டுள்ளார்.

அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மனித சமூகத்திற்கு பயன்படாத சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் அரசு இருக்கிறது என்றும், இந்த நச்சுச் செடிகளை அகற்றும் முறையை அரசுடன் கலந்து ஆலோசித்து, அதற்கான திட்டத்தை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சீமைக்கருவேல செடியை வளர்க்கக் கூடாத செடிகள் என அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ளது. கேரளாவில் சீமைக்கருவேல செடிகளை பார்க்க முடியாது. மீண்டும் சீமைக்கருவேல ஒழிப்பு பணி தமிழகத்தில் மின்னல் வேகத்தில் நடைபெறப் போகிறது. வரலாறு படைக்கும் வைகோ முன்னெடுக்கும் முயற்சிகள் தடைகளை தகர்த்து வெற்றி பெற்றே தீரும். இதுவும் ஒரு சான்று. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: