ஐபிஎல் 2022 மெகா ஏலம் தீபக் சாஹருக்கு கடும் கிராக்கி இருக்கும்: ஆகாஷ்சோப்ரா கணிப்பு

மும்பை: ஐபிஎல் 2022 அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் வரும் 12, 13ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுடன் சேர்ந்து திட்டம் வகுத்து வருகின்றன. இந்த முறை வெளிநாட்டு வீரர்களை விட இந்திய இளம் வீரர்களுக்கு அதிக மவுசு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த சீசனில் கலக்கிய சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெயிக்வாட், பஞ்சாப் அணி பிஷ்னாய், கொல்கத்தா வெங்கடேஷ் ஐயர் என இளம் வீரர்களை அந்தந்த அணிகளே தக்கவைத்ததன் மூலம் மீதமுள்ள வீரர்களை மற்ற அணிகள் டார்கெட் செய்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ``இந்தியாவை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் காட்டில் நிச்சயம் பணமழைதான். அவர்கள் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அதிலும் தீபக் சாஹருக்கு கடும் கிராக்கி இருக்கும். அதிக விலை போகும் வீரர்களில் அவரும் ஒருவராக இருப்பார்.

ஏனெனில் பவர் பிளேவில் அதிக விக்கெட்கள் வீழ்த்தும் திறமை அவரிடம் உள்ளது. மற்ற இந்திய பவுலர்களைவிட தீபக் சாஹர்தான், பவர் பிளேவில் அதிக விக்கெட்களை எடுக்கிறார். அனைத்து அணிகளுமே, ஓபனிங் பார்ட்னர்ஷிப்பை விரைவாக உடைக்க முயற்சிக்கும். ஏனென்றால் அப்போது தான் எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்ட வாய்ப்பு கிடைக்கும். அதனை தீபக் சாஹர் சரியாக செய்து வருகிறார்.  எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் எந்த அணிக்கு சென்றாலும், இதனை  சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாக தீபக் சாஹரை  பெரிய தொகைக்கு வாங்க, சிஎஸ்கே உட்பட அனைத்து அணிகளும் போட்டி போடும். இதுதவிர தென்னாப்பிரிக்க தொடரில் கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு பெற்ற தீபக் சாஹர் 2 விக்கெட்கள் எடுத்தது மட்டுமல்லாமல் அரைசதமும் விளாசி அசத்தினார். இதனால் அவர் மீதான பார்வை அதிகரித்துள்ளது. இதன்மூலம் பேட்டிங்கிற்காகவும் அவர் மீது அனைத்து அணிகளும் குறிவைத்துள்ளன’’ என்றார்.

Related Stories: