ரூ.3 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் உள்ள மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றப்பிரிவு அலுவலகம் வந்தார்: கொரோனா நெகட்டிவ் சான்று இல்லாததால் திருப்பி அனுப்பினர்

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்த வழக்கில், கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திரபாலாஜி, சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் தங்கியுள்ளார். இதனிடையே, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று காலை 10 மணிக்கு ராஜேந்திரபாலாஜி வந்தார். அவருக்கு 7 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருந்ததால், நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே விசாரணை அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால், சான்றிதழ் அவரது கையில் இல்லை. எனவே காரில் ஏறி அமர்ந்து கொண்டார். அவரது உதவியாளர்கள் நெகட்டிவ் சான்றிதழ் பெற முயற்சித்தனர். ஆனால் 1.30 மணி நேரம் ஆகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜேந்திரபாலாஜி, ‘‘நெகட்டிவ் சான்றிதழ் இன்று காலை கிடைக்கும் என தெரிவித்ததால் ஆஜராக வந்தேன். சான்றிதழ் வரவில்லை. அடுத்த விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராவேன்’’ என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Related Stories: