சூரிய மின் உற்பத்தி ஒப்பந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டான்ஜெட்கோ இயக்குனர், மின்வாரிய தலைவர் நேரில் விளக்கம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளர், டான்ஜெட்கோ இயக்குனர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் அமைப்பு சாரா எரிசக்தி பிரிவு தலைமை பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் 2012ல் அறிவிக்கபட்ட சூரிய மின்சக்தி கொள்கையின் படி 3 ஆண்டுகளில்  3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சார உற்பத்தி ஆலையை உருவாக்க திட்டமிடப்பட்டது.

இதில் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் என்னுமிடத்தில் 100 மெகாவாட் சூரிய  மின் உற்பத்தி ஆலையை அமைக்க அல் அமீன் கிரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 40 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி ஆலையை அமைக்க 5 கோடி ரூபாய் வைப்பீடு தொகை உட்பட 175 கோடி ரூபாய் செலவு செய்து உற்பத்தி தொடங்கும் நிலையில், குறித்த காலத்தில் உற்பத்தியை தொடங்கவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) ரத்து செய்தது.

இதை எதிர்த்து, ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆலையை தொடங்க அனுமதி கோரிய போது, புதிய திட்டமாக கருதி மேலும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வைப்பீடு தொகை செலுத்த டான்ஜெட்கோ உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வைப்பீடு இல்லாமல் மனுதாரரின் நிறுவனம் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

இதையடுத்து, சூரிய மின் உற்பத்தி ஆலையை துவங்க அனுமதி கோரி அரசை அணுகியபோது, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாததிற்கு முரணாக மீண்டும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலுத்த டான்ஜெட்கோ உத்தரவிட்டுள்ளதாக கூறி அல் அமீன் கிரின் எனர்ஜி நிறுவனம் சார்பில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் காஜா முகைதீன் ஹிஸ்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு  அவமதிக்கபட்டுள்ளதாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதால் தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளர், டான்ஜெட்கோ இயக்குனர் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை தலைவர் மற்றும் அமைப்பு சாரா எரிசக்தி பிரிவு தலைமை பொறியாளர் 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: