கேப்டனாக அவரை விட்டாலும் வேறு யாரும் இல்லை; ரோகித் சர்மாவுக்கு உடற்தகுதி தான் மிகப்பெரிய சவால்.! முன்னாள் வீரர் சபாகரீம் பேட்டி

மும்பை: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அண்மையில் விராட் கோஹ்லி விலகினார். இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், அஸ்வின் ஆகியோர் இந்த போட்டியில் இருந்தாலும் ரோகித்சர்மா தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இதுபற்றி முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு தலைவருமான சபாகரீம் அளித்துள்ள பேட்டி: ரோகித்சர்மா தனது திறமையால் உயர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரோகித்சர்மாவுக்கு சவாலாக இருந்தாலும், அவர் சிறப்பாக ஆடி ரன் எடுத்தார்.

ஆனால் இப்போது அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் அவர் பிட்டாக இருக்கிறாரா என்பது தான். மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவது கூட அவருக்கு மிகப்பெரிய பணியாகும். அவர் பலமுறை காயம் அடைந்துள்ளார், இப்போது கூட அவர் காயம் அடைந்து அதில் இருந்து மீண்டு திரும்புகிறார். இவ்வளவு பெரிய முடிவை (டெஸ்ட் கேப்டன்) எடுப்பதற்கு முன் பிசியோ, பயிற்சியாளர்கள் மற்றும் அவரது உடற்தகுதியுடன் தொடர்புடைய அனைவரிடமும் ஆலோசனை பெற வேண்டும். டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் காயமடையும் ஒரு கேப்டனை கொண்டிருக்க முடியாது. மூன்று வடிவங்களிலும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், அது குறுகிய கால பணியாகவே இருக்கும்.

2023 இந்திய கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான ஆண்டு. 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளது, தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியும் முடிவடையும். எனவே இதனை முதலில் பிசிசிஐ புரிந்துக்கொள்ள வேண்டும். கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் ஆகிய இருவரும் தயாராக இல்லாததால், தற்போது ரோகித் தான் ஒரே விருப்பம். மூன்று வடிவங்களிலும் விளையாடும் ஒருவரை வளர்க்க வேண்டும். இப்போதைக்கு, கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பன்ட் போன்ற யாரும் சீர் செய்யப்படாததால், ரோகித் மட்டுமே ஒரே வழி, என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: