அரசு இடத்தில் கல் குவாரி கிராம மக்களுடன் கருத்து கேட்பு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

வாலாஜாபாத்: அரசு இடத்தில் கல்குவாரி அமைப்பது குறித்து, கிராம மக்களிடையே கருத்துக் கேட்புக் கூட்டம்,,  கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் மதூர், பட்டா, பழவேரி, அருங்குன்றம், பினாயூர், குண்ணவாக்கம், பேரனாக்காவூர், சிறுமயிலூர், சித்தாலப்பாக்கம் ஆகிய கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், சிறுதாமூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக  கல்குவாரிகள் அமைய உள்ளது. இதுகுறித்து, தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், கிராம மக்களிடையே கருத்துக் கேட்புக் கூட்டம், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் வாலாஜாபாத்தில் நேற்று நடத்தப்பட்டது.

கூட்டத்தில், கலந்து கொண்ட கிராம மக்கள், தங்கள் பகுதியில் கல்குவாரிகளின் செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், சாலைகள் முழுவதும் சேதமடைந்து, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலைகள் சேதமடைந்துள்ளதால் கிராமப் பகுதிகளுக்கு வரும் அரசு பஸ்களும் இயக்கப்படாமல் உள்ளது என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினர். மேலும், கருத்துக் கேட்புக் கூட்டத்தை சம்பந்தப்பட்ட கிராமங்களில் நடத்த வேண்டும். கல் குவாரிகளில் செயல்பாடுகளை, அரசு அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்து நடவடிக்கை நடக்க வேண்டும் என  வலியுறுத்தினர். கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், ஆர்டிஓ ராஜலட்சுமி, உத்திரமேரூர் தாசில்தார் காமாட்சி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: