வங்கமொழி நடிகர் போனி சென்குப்தா பாஜவில் இருந்து விலகல்

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு வங்கமொழி நடிகர் போனி சென்குப்தா பாஜவில் இணைந்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் பாஜ தோல்வியை தழுவியது. பாஜ ஆட்சி அமைக்காத நிலையில் கடந்த சில மாதங்களாக போனி சென்குப்தா கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்து வந்தார். இந்நிலையில் தான் பாஜவில் இருந்து விலகுவதாக போனி சென்குப்தா அறிவித்துள்ளார்.

இது குறித்து போனி சென்குப்தா தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாரதிய ஜனதா கட்சியுடனான எனது தொடர்பு இன்று முதல் முடிவுக்கு வருகின்றது. பாஜ தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. மாநிலத்துக்கோ அல்லது வங்க திரைப்படத்துறைக்கோ எந்த மேம்பாட்டு பணியையும் செய்தததை நான் பார்க்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு மே 2ம்  தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜ தலைவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாஜ மாநில செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், ‘ மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைக்கவில்லை. எனவே பணிகளை செயல்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரம் நம்மிடம் இல்லை’ என்றார்.

Related Stories: