லாரி மோதியதில் 52 ஆடுகள் உயிரிழப்பு: நஷ்ட ஈடு கோரி ஆட்டின் உரிமையாளர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பறையங்குளம் கிராமத்தில் சாலையில் வந்த லாரி மோதியதில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான 52 ஆடுகள் உயிரிழந்தன. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி முனியசாமி உறவினர்கள் ஆடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு காவடிபட்டி என்ற இடத்தில் பறையங்குளம் முனியசாமி என்பவரின் ஆடுகள் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 40 ஆடுகள் உயிரிழந்தன. பின்னர் படிப்படியாக 12 ஆடுகள் உயிரிழந்தன.

இந்த சம்பவம் குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் ஆடுகளுக்கு நஷ்ட ஈடு எதுவும் வழங்கவில்லை என முனியசாமி தரப்பினர் இன்று காலை 10 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக கமுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் நஷ்ட ஈடு பெற்று தருவதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் கமுதி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: