இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி பாக்.கின் 35 யுடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பும் 35 யுடியூப் சேனல்கள், 2 இணையதளங்களுக்கு தடை விதித்து ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த 35 யுடியூப் அலைவரிசைகள், 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன.  

மேலும், இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள 2 டிவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் முகநூல் கணக்கு ஒன்றும் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறைகள் சட்டம் 2021, விதி 16-ன் கீழ், இதற்கான 5 உத்தரவுகளை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை உன்னிப்பாக கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த பரிந்துரையின் பேரில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இவற்றை தடை செய்துள்ளது. இவற்றில் சில யுடியூப் சேனல்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களால் நடத்தப்படுகின்றன.

Related Stories: