சாயல்குடி பகுதியில் நிலக்கடலை விளைச்சல் அமோகம்

சாயல்குடி :  ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை அமோகமாக விளைந்துள்ளதால்  விவசாயிகள் கடலை பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி,செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1900 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி, கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. இதனால் 105 நாட்களில் மகசூல் தரக்கூடிய தரணி, கோ 7 ரகம் மற்றும் நாட்டு நிலக்கடலை பயிரிடப்பட்டது. தொடர்ந்து சீரான தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நிலக்கடலை பயிர்கள் நன்றாக வளர்ந்தது. தற்போது வேர்கடலை நன்றாக விளைந்த நிலையில் விவசாயிகள் பறித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூரான்கோட்டை விவசாயிகள் கூறுகையில், காலம் கடந்து பருவமழை பெய்ததால் சில இடங்களில் மட்டும் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு நிலக்கடலை விளைச்சல் நன்றாக வந்துள்ளது.   இதனால் ஒரு கிலோ கடலை ரூ.70 முதல் 80 வரை விலை போகிறது. பறிப்பதற்கு கூலியாக 5 முதல் 8 கிலோ வரையிலான நிலக்கடலை வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நிலக்கடலை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: